இந்தியா

புறமுதுகில் குத்துவது மலையாளிகளின் டி.என்.ஏ-விலேயே உள்ளது - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

webteam

புறமுதுகில் குத்துவது மலையாளிகளின் டி.என்.ஏவிலேயே உள்ளது எனவும் சக மலையாளிகள் ஏதேனும் துறையில் முன்னேறினால் அவர்களுக்கு பிடிக்காது எனவும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர், இஸ்ரோவில் பணிபுரிந்தபோது விண்வெளி ஆய்வு ரகசியங்களை வெளிநாட்டிற்கு கடத்தியதாக கடந்த 1994ம் ஆண்டு புகார் எழுந்து கேரள போலீசார் விசாரித்தனர். 

தொடர்ந்து  நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை குழுவில் அப்போதைய எஸ்பி சென்குமாரும் இடம் பெற்றிருந்தார். பின்னர் 24 வருடங்கள் நடந்த வழக்கில் இருந்து கடந்த வருடம் நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து தற்போது மத்திய அரசு நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் டிஜிபி சென்குமார், “ விண்வெளி  ஆய்வு மைய ரகசிய கடத்தல் தொடர்பான வழக்கு இன்னும் முடிவடையவில்லை. இதுதொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

ஆனால் அதற்குள் நம்பி நாராயணனுக்கு அவசரப்பட்டு பத்மபூஷண் விருது அறிவித்தது ஏற்கத்தக்கதல்ல. இந்த விருதை அவருக்கு அறிவித்ததன் மூலம் பத்மபூஷண் விருதுக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. நம்பி  நாராயணன் ஒரு சிறந்த விஞ்ஞானி அல்ல. அவர் சாராசரியை விட குறைந்த அறிவு படைத்தவர்தான். பத்ம விருதுக்கு, நம்பி நாராயணன் தகுதியற்றவர்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புறமுதுகில் குத்துவது மலையாளிகளில் டி.என்.ஏவிலேயே உள்ளது எனவும் சக மலையாளிகள் ஏதேனும் துறையில் முன்னேறினால் அவர்களுக்கு பிடிக்காது எனவும் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறுகையில், “இந்தப் பழக்கம் மாற வேண்டும். ஆனால், ஏன் மலையாளிகள் மத்தியில் பொதுவான பழக்கமாக இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு மலையாளியின் சாதனை அங்கீகரிக்கப்பட்டதால் மற்ற மலையாளிகள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆனால், ஒரு மலையாளியின் சாதனையை மற்ற மலையாளிகள் பார்ப்பதில்லை” என்றார்.