இந்தியா

கேரளாவில் களையிழந்தது ஓணம் பண்டிகை

கேரளாவில் களையிழந்தது ஓணம் பண்டிகை

webteam

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகின்றது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் இந்த ஆண்டு கடும் மழை பெய்தது. மழை வெள்ளம் காரணமாகவும் நிலச்சரிவு காரணமாகவும் 231 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். இன்னும் சுமார் 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மழையால் கடும் பாதிப்புக்குள்ளான கேரளாவுக்கு உதவிகள் குவிந்துவருகிறது.


மழை வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை இந்த வருடம் கொண்டாடவில்லை. பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பண்டிகையை கொண்டாடாமல் நிவாரண உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டு வருகின்றனர். 

கேரளாவின் அனாச்சல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு பண்டிகை களையிழந்துள்ளது. ஐயப்பன் கோயிலே வெறிச்சோடி காணப்படுகிறது. ஓணம் பண்டிகைக்காக ஆண்டு தோறும் செய்யப்படும் அலங்காரங்கள் இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளன. 

இதுபற்றி கோயிலின் செயலாளர் சுகுமாறன் நாயர் கூறும்போது, ‘மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை’ என்றார். கேரளா மட்டுமின்றி மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் வசிக்கும் கேரள மக்களும் இந்த வருடம் ஓணம் பண்டிகையை கொண்டாடவில்லை.