இந்தியா

மலேரியா மருந்தை கொரோனாவுக்கு கொடுப்பது ஆபத்தானது - மருத்துவ வல்லுநர்கள்

webteam

மலேரியா மருந்தை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கொடுப்பதால் இதயப் பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் இந்த நோய் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலின் மருந்தான ஹைட்ராக்ஸின்லொரொகுயின் மற்றும் ஆன்ட்டிபயாடிக் அஸித்ரோமிசின் ஆகியவற்றை கொடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த மருந்துகள் கொரோனாவை பெரிதும் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரேகான் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், இந்தியானா பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த மருத்துவ வல்லநர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா மருந்தை கொடுப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆராய்ச்சியின் படி அவர்கள் தெரிவித்துள்ள தகவலில், இதயத்துடிப்பு குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு மலேரியா மருந்து விரைவாகவும், அசாதாரணமாகவும் செயல்பட்டு இதயப் பிரச்னைகளையும், அடைப்புகளையும் ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். இதேபோன்று அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், நூற்றுக்கணக்கான மருந்துகள் மாரடைப்பை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

மேலும், உடலில் பிரச்னை உள்ள நபர்களுக்கு மலேரியா மருந்தினை கொடுக்கும்போது, அது கூடுதலாக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் மாரடைப்புகளை ஏற்படுத்தும் மருந்தினை நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை மருத்துவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.