இந்தியா

மூன்றாம் பாலினத்தவர்களின் வேலை வாய்ப்பிற்கு புதிய சட்டம் இயற்றுங்கள் - உச்ச நீதிமன்றம்

webteam

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாத வேலை வாய்ப்பை வழங்க புதிய சட்டத்தை இயற்றலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பை வழங்குவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. மேலும், அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர்ஹோஸ்டர்ஸ் பணி என்னும் விமான பணிப்பெண் பணிக்கு ஷானவி என்ற திருநங்கை விண்ணப்பித்திருந்தார். திருநங்கையாக இருந்ததால் விண்ணப்பத்தில் அதற்கான தனி விண்ணப்ப பகுதி இல்லாததால் பெண்கள் பிரிவில் விண்ணப்பத்திருந்தார் ஷானவி. இந்நிலையில் விண்ணப்பித்த அவருக்கு பணி தொடர்பான எந்த அறிவிப்புகளையும் ஏர் இந்தியா நிறுவனம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் திருநங்கை ஷானவி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் பதிலளித்த ஏர் இந்தியா நிர்வாகம், ஷானவி பெண் என்ற முறையில் தான் தேர்வு எழுதினார் எனவும், ஆனால் தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெறாததால் தான் அவரை பணிக்கு எடுக்கவில்லை என கூறியது. எனினும் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையில், தற்போது ஏர் இந்தியா அரசிடம் இல்லாத நிலையில் மத்திய அரசின் பங்கு என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு ஏர் இந்தியாவின் நிலைபாடு என்ன என கேட்கப்பட்டது. பதிலளித்த ஏர் இந்தியா நிர்வாகம், ஏர்ஹோஸ்டர்ஸ் பணிக்கு திருநங்கைகளுக்கு என தனியாக எந்த பிரிவும் இல்லை என பதிலளித்தது. அதற்கு எதிர் கேள்வி கேட்ட நீதிபதிகள், அவர் திருங்கை என்ற ஒரே காரணத்திற்காக தான் அவருக்கு இந்த பணி வழங்கப்படவில்லையா? என கேள்வி எழுப்பினர்.

மேலும் திருநங்கைகளுக்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது என கருத்து கூறிய நீதிபதி சந்திரசூட், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பை வழங்குவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குங்கள் என மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அடுத்த மூன்று மாதத்தில் அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாத வேலை வாய்ப்பை வழங்க புதிய சட்டத்தை இயற்றலாம் எனவும் நீதிபதிகள் யோசனை கூறினர். இதையடுத்து வழக்கு டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- நிரஞ்சன்