இந்திய ரூபாய் தாள்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்கப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இந்திய ரூபாய் தாள்களில் பயன்படுத்தும் நூலிழை, ரசாயன மை உள்ளிட்ட பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. இவற்றை மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்திய ரூபாய் தாள்களில் பயன்படுத்தும் நூலிழை, ரசாயன மை உள்ளிட்ட பொருட்கள் கொள்முதலுக்கான விதிகளில் புதிய அம்சம் ஒன்றை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது.
இதில் ரூபாய் தாள்களில் பாதுகாப்பு அம்சங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அல்லது 2 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கும் நிறுவனத்துக்கு மட்டுமே ஒப்பந்தம் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு டெண்டர்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டது. புதிதாக டெண்டர் கோருபவர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி உள்நாட்டில் மேற்கண்டவற்றை உற்பத்தி செய்வதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே டெண்டர் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.