வழி தவறிய பசுக்களை பாதுகாக்க உடனடியாக கமிட்டி ஒன்றினை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். இதனிடையே, உயர் மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இந்த வாரம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். குறிப்பாக வழி தவறிய பசுக்களை பாதுகாக்க கமிட்டி அமைக்குமாறு தலைமைச் செயலாளர் அனுப் சந்த பாண்டேவுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் பேசுகையில், “கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் மீது ஆக்கிரமிப்பு நடைபெற்றால், உடனடியாக அத்துமீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து வாரியாக பசுக்களுக்காக சுமார் 750 முகாம்களை அமைக்க வேண்டும். அதில், பசுக்களுக்கு தேவையான் தீவனம், குடிநீருக்கான வசதி உள்ளிட்ட அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
பசு முகாம்களுக்கான மொத்தமுள்ள 16 முனிசிபல் கார்பரேஷனுக்கு தலா ரூ10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பசு முகாம்களை அமைக்க ரூ1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசு முகாம்களுக்கான நிதி அனைத்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை” என்று கூறினார்.