kakoli ghosh dastidar & Mamata Banerjee  web
இந்தியா

மம்தாவுக்கு அடிக்கு மேல் அடி.. 20 TMC எம்பிக்கள் கூட்டாக NDA-க்கு ஆதரவு?

தேர்தல் தோல்விக்குப் பிறகு பெரும் உட்கட்சிப் பூசலை எதிர்கொண்டுள்ள மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் NDAக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ககோலி கோஷ் தெரிவித்துள்ளார்.

PT WEB

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார், தன்னுடன் சுமார் 19 எம்பிக்கள் உள்ளதாக கூறி, வங்காள வளர்ச்சிக்காக NDA-க்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். பூபேந்தர் யாதவ் மற்றும் சதாப்தி ராய் இல்லங்களில் நடைபெற்ற ரகசிய ஆலோசனைகள், மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியில் ஊழல், அராஜகம் அதிகரித்ததற்கான எதிர்ப்பாக அமைந்துள்ளன.

செய்தியாளர்: M.மீரா

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்து, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் பெரும் தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளில் இருந்தும் விலகி வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது. முதலில் எம்.எல்.ஏ. ரிதாப்ரதா பானர்ஜி 58 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநிலச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இது மம்தாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

Suvendu Adhikari & Mamata Banerjee

இந்த நிலையில் திங்களன்று, INDIA கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்ற இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் திரிணமூல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையிலான அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான பூபேந்தர் யாதவின் இல்லத்தில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாலையில், பிர்பும் தொகுதியின் 4முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சதாப்தி ராயின் இல்லத்தில் இந்தக் குழுவினர் மீண்டும் சந்தித்ததுள்ளனர்.

மம்தாவுக்கு எதிராக களமிறங்கியிருக்கும் திரிணமூல் எம்.பி.க்களின் இரு கூட்டங்களிலும் சுவேந்து அதிகாரி (Adhikari) கலந்துகொண்டதாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ்செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியில் கட்டுக்கடங்காத ஊழல் மற்றும் அராஜகமான ஆட்சி நிலவியதாகக் குற்றம் சாட்டி, மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சில மணிநேரங்களிலேயே இந்த நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.

kakoli ghosh dastidar & Mamata Banerjee

இதனைத் தொடர்ந்து ​​கடந்த மாத இறுதியில் திரிணாமுல் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகிய பரசாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார், தனது ஆதரவாளர்கள் 19 பேருடன் கட்சியை விட்டுப் பிரிந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

வங்காளத்தின் வளர்ச்சிக்காக, என்னையும் சேர்த்து சுமார் 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முறையாக ஆதரவளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று நான்கு முறை எம்.பி.யாக இருந்த ககோலி கோஷ் கூறியுள்ளார்.

மேலும் 2011-இல் மம்தா பானர்ஜி முதலமைச்சரான பிறகு நான் இங்கு வரவில்லை; கடந்த 40 ஆண்டுகளாக நான் இங்குப் போராடி வருகிறேன். மம்தா ஆட்சியில் இல்லாதபோதும் நான் அவருடன் இருந்தேன். ஆனால் அந்த நேரத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் ஏழை மக்களுக்கான மக்கள் நலன் சார்ந்த ஒரு கொள்கை மம்தாவுடன் இருந்தது... ஆனால் கடந்த 3-4 ஆண்டுகளாக, அவர் செய்த பணிகள் திருப்திகரமாக இல்லை என்று ககோலி கோஷ் கூறியுள்ளார்.