ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து PTI
இந்தியா

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

webteam

கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா அருகே நடந்த ரயில் விபத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 288 பேர் பலியானதாகவும், 1,000க்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், “மின்னணு இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட மாறுதல்தான் விபத்துக்கான காரணம்” என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

Balasore Train Accident

இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. ”விபத்து நடந்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதன் காரணமாக இன்டர் லாக்கிங் அமைப்பு மூடப்பட்டுள்ளது” என சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்படாத காரணத்தினால் கணினியின் மூலம் இயங்கும் இன்டர்லாக்கிங் அமைப்பை அணைத்துவிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் கிரீன் சிக்னல் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்டர்லாக்கிங் அமைப்பின் இயக்கம் தொடர்பாக ரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள சிக்னல், தொலைத் தொடர்பு சாதனம், ட்ராக், பாயிண்ட் போன்ற அனைத்தும் இரட்டைப் பூட்டுதல் முறையை பயன்படுத்தியே செயல்படுத்தப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இரட்டை பூட்டுதல் முறையை தனிமையில் யாரும் அணுக முடியாது என்பதால் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Balasore Train Accident

ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு மின்னணு இன்டர்லாக்கின் அமைப்பு காரணம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் சிபிஐ விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் ரிலே அறைக்கான சிக்னல் குறுக்கீடு ரயில் விபத்திற்கான முக்கியக் காரணமாக தெரிவிக்கப்படுகிறது. ஒற்றைப் பூட்டுதல் முறை என்பது ஸ்டேஷன் மாஸ்டரின் உத்தரவுபடி செயல்படும் நிலையில், இரட்டைப் பூட்டுதல் முறையின் மூலம் உதவி ஸ்டேஷன் மாஸ்டரின் உத்தரவும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் நிலையங்களின் ரிலே அறைகளில் இருந்து கொடுக்கப்படும் சிக்னல் மற்றும் தகவல்கள் அனைத்தும் பராமரிப்பு ஊழியர்களால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும், பதிவேற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு லாக் புத்தகம், ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை, சிக்னல் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சரக்கு ரயில் உட்பட எந்த ரயிலும், பாஹாநாகா ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 170 ரயில்கள் கடந்துசெல்லும் பாஹாநாகா பஜார் ரயில் நிலையத்தில் சுமார் 7 உள்ளூர் ரயில்கள் நின்று செல்லும். அவைகளும் மறு உத்தரவு வரும் வரை நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Balasore Train Accident

சிபிஐயின் முதல்கட்ட விசாரணையில் இத்தகைய தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சிபிஐ மேலும் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து பாஹாநாகா ரயில் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.