gandhiji google gemeni
இந்தியா

காஷ்மீர் மீது தாக்குதல்.. பாகிஸ்தானிற்கு ரூ.55 கோடி கொடுக்க வலியுறுத்திய காந்திஜி!

1947ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காஷ்மீர் மீது பாகிஸ்தான் ஆதரவு பழங்குடியினரும் ராணுவமும் தாக்குதல் நடத்தியதால், மீதமுள்ள ரூ.55 கோடியை நிறுத்திவைத்தது.

Prakash J

இந்தியா, இன்று தனது 80ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், மகாத்மா காந்தியடிகளின் கடைசி உண்ணாவிரதத்தின்போது ரூ.55 கோடியை அப்போதைய மத்திய அரசு பாகிஸ்தானுக்கு விடுவித்தது. இதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்து அறிவோம்.

1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மேற்கு பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்து மற்றும் சீக்கிய அகதிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். இதனால் டெல்லியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இந்த மத மோதல்களை உடனடியாக நிறுத்தவும், டெல்லி முஸ்லிம்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி 1948 ஜனவரி 13 அன்று பிர்லா மாளிகையில் மகாத்மா காந்தி தனது கடைசி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

gandhiji

இதற்கிடையே, இந்தியப் பிரிவினையின்போது, ஒருங்கிணைந்த இந்தியாவின் கருவூல ரொக்க இருப்பு இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்பட்ட ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு ரூ.75 கோடி வழங்கப்பட வேண்டும். இதில், இந்தியா முதற்கட்டமாக ரூ.20 கோடியை வழங்கிவிட்டது. ஆனால், 1947ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காஷ்மீர் மீது பாகிஸ்தான் ஆதரவு பழங்குடியினரும் ராணுவமும் தாக்குதல் நடத்தியதால், மீதமுள்ள ரூ.55 கோடியை நிறுத்திவைத்தது.

டெல்லியில் மத நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதே உண்ணாவிரதத்தின் முதன்மை இலக்காக இருந்தாலும், நேர்மை மற்றும் நன்னம்பிக்கையின் அடிப்படையில் அந்த நிதியை பாகிஸ்தானுக்கு உடனே வழங்க வேண்டும் என்றும் காந்தி வலியுறுத்தினார். இதையடுத்து, இந்து, முஸ்லிம், சீக்கிய மதத் தலைவர்கள் டெல்லியில் அமைதியை ஏற்படுத்துவதாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் உறுதியளித்து அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

gandhiji

இதனால், இந்திய அரசும் நிதியை விடுவிக்க ஒப்புக்கொண்டது. அதன்பிறகு, காந்தியும் உண்ணாவிரத்தை நிறைவு செய்தார். எனினும், போர்ச் சூழலில் பாகிஸ்தானுக்குப் பணம் வழங்க அரசுக்கு அழுத்தம் கொடுத்த நடவடிக்கை மற்றும் சிறுபான்மையினருக்கான காந்தியின் ஆதரவு ஆகியவை தீவிரவாத அமைப்புகளிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதன் பின்னணியில்,1948 ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.