இந்தியா

5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை? 

webteam

அகிம்சை வழிக்கு மிகவும் பேர்போன மனிதராக திகழந்தவர் மகாத்மா காந்தி. இவர் தனது சத்தியாகிரக போரட்டத்தில் உண்மை மற்றும் அகிம்சை ஆகிய இருவழிகளை மட்டுமே கடைப்பிடித்தவர். இத்தகைய மாமனிதரான மகாத்மா காந்திக்கு உலக அமைத்திகான உயரிய விருதான நோபல் பரிசு கிடைக்கவே இல்லை. அவருடைய 150ஆவது பிறந்த நாளான இன்று அவர் நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்ட வரலாற்று கதை குறித்து கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.

மகாத்மா காந்தி அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 5 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

முதன்முறையாக காந்தி 1937ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அப்போது காந்தியின் பெயரை நார்வே நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் கட்சியின் உறுப்பினருமான ஓல் கோல்ப்ஜோர்ன்சன் (Ole Colbjørnsen ) அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைத்தார். அந்த வருடம் காந்தியின் மேல் மற்ற நாடுகளை சேர்ந்த சில அறிஞர்கள் சில விமர்சனத்தை வைத்தனர். அவர் இந்தியா சார்ந்தே அதிகம் செயல்பட்டார் என்ற விமர்சனத்தை வைத்தனர். அந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு லார்ட் செசில் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து 1938,1939 ஆகிய ஆண்டுகளுக்கு மீண்டும் ஓல் கோல்ப்ஜோர்ன்சன் அமைதிக்கான நோபல் பரிசை மீண்டும் பரிந்துரைத்தார். அந்த வருடங்களிலும் காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.

1947ஆம் ஆண்டு காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான பரிந்துரை இந்தியாவிலிருந்து தந்தி மூலம் நார்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை பி.ஜி.கெர், கோவிந்த் பல்லப் பன்ட், மாவலன்கர் ஆகியோர் எழுதியிருந்தனர். அந்த வருடம் இறுதியாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வான 6 பேர் பட்டியலில் காந்தியின் பெயர் இடம் பெற்று இருந்தது. 

அப்போது நோபல் கமிட்டியின் ஆலோசகர் ஜென்ஸ் அருப் செயிப் (Jens Arup Seip) ஒரு அறிக்கையை எழுதினார். அதில்,“1937ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதில் ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் கிடைத்துள்ளது. அதில் இந்திய சுதந்திரம் என்பது வெற்றியையும், பாகிஸ்தான் பிரிவினை என்ற தோல்வியையும் தந்துள்ளது. அத்துடன் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருந்திருந்தால் காந்தியின் அகிம்சை கொள்கைகள் இந்தியாவில் வெற்றி அடைந்ததாக கருதியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். 

எனினும் அந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் குழுவில் இருந்த மூன்று பேர் காந்திக்கு நோபல் பரிசு வழங்குவதை எதிர்த்தனர். அதில் குறிப்பாக குன்னர் ஜான் (Gunnar Jahn) மற்றும் மார்டின் டிரான்மல் (Martin Tranmael)ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை மற்றும் காந்தி தனது பிரார்த்தனை கூட்டத்தில் பேசியதாக வெளிவந்த செய்தி ஆகியவற்றை சுட்டிக்காட்டி காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்ககூடாது என்று எதிர்த்தனர். எனவே அந்த ஆண்டு நோபல் பரிசு The Quakers என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டது.  

மீண்டும் 1948ஆம் ஆண்டு காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது காந்தியின் பெயரை பரிந்துரைத்து 6 கடிதங்கள் வந்தன. அவற்றில் 1946 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற எமிலி கிரீன் பால்ச் (Emily Greene Balch) காந்தியின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்திருந்தார். அதேபோல 1947ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற 'The Quakers' அமைப்பும் காந்தியின் பெயரை பரிசுக்கு பரிந்துரைத்திருந்தது. இந்த ஆண்டும் நோபல் பரிசு குழுவின் இறுதிப் பட்டியலில் காந்தி இடம்பெற்றிருந்தார். அவருடன் மேலும் இருவரும் இடம்பெற்றிருந்தனர். 

அதற்குள் ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தி உயிரிழந்தார். ஆகவே உயிரிழந்த ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதில்லை. எனினும் நோபல் பரிசு கொடுக்கும் அமைப்பின் சட்டங்களின் படி சில சூழ்நிலைகளில் உயிரிழந்தவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்று விதி இருந்தது.

இதனால் காந்தி இறந்த பிறகும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து நடத்த தீவிர விவாதத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டது. அதன்படி நோபல் பரிசு வழங்கும் குழு பரிசு வழங்க முடிவு எடுத்த பிறகு அந்த நபர் உயிரிழந்து விட்டால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. 

1948 ஆம் ஆண்டு‘உயிருடன் உள்ள யாரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர்கள் இல்லை’ என்று நோபல் பரிசு குழு அறிவித்தது. அத்துடன் அந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கவில்லை. எனவே மகாத்மா காந்தி  அமைதிக்கான நோபல் பரிசுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் ஒருமுறை கூட அமைதிக்கான நோபல் பரிசை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.