பஹல்காம் pti
இந்தியா

’இஸ்லாமிய வசனத்தைச் சொல்லுங்கள்’.. மறுத்ததால் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்.. மகள் வேதனை!

சாலையோர உணவகங்களில் ஓய்வெடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் இதுகுறித்த சம்பவங்களை விவரித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள், அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர்

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப் பலராலும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த நிலையில் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். அதேநேரம், ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும், பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.

பஹல்காம்

மறுபுறம், சாலையோர உணவகங்களில் ஓய்வெடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் இதுகுறித்த சம்பவங்களை விவரித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள், அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். உயிர் பிழைத்தவர்களின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களிடம் பெயர்களைக் கேட்டு விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த 26 வயதான அசவரி ஜக்தலே, "உள்ளூர் போலீஸ்காரர்களைப்போல ஆடை அணிந்திருந்த அவர்கள் என் தந்தையிடம் ஒரு இஸ்லாமிய வசனத்தை சொல்லச் சொன்னார்கள். அவர், அதைச் சொல்லத் தவறியபோது, ​​அவர்கள் அவரைத் தாக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் துப்பாக்கி ஏந்தியவர்கள் எனது மாமாவை நோக்கி திரும்பி அவரையும் சுட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அடுத்த 20 நிமிடத்தில் ராணுவத்தினர் அங்கு வந்தனர்” எனத் தெரிவித்துள்ளார். இவருடைய தந்தை ​​புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ஜக்டேல் என்பது குறிப்பிடத்தக்கது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த 26 பேரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேரில் சந்தோஷ் ஜக்தலேவும் ஒருவர். மற்ற ஐந்து பேர் தானேயைச் சேர்ந்த அதுல் மானே, சஞ்சய் லேலே மற்றும் ஹேமந்த் ஜோஷி, புனேவின் கவுஸ்துப் கண்போட் மற்றும் நவி மும்பையைச் சேர்ந்த திலீப் தோசலே ஆகியோர் ஆவர்.

பஹல்காம்

இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த நாக்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், "அந்த இடத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் வெளியேறியபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. அங்கு, நீண்டநேரம் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றனர். சுமார் 4 அடி அகலம் கொண்ட ஒற்றை வழியில் இருந்து பலர் வெளியேற முயன்றபோது, ​​அதில் சிலர் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க முடியாதவர்களுக்கு அந்த பரந்தவெளியில் ஒளிந்துகொள்ள இடம் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.