இந்தியா

“மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவர்தான்”  - சஞ்சய் ரவுத் திட்டவட்டம்

“மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவர்தான்”  - சஞ்சய் ரவுத் திட்டவட்டம்

webteam

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்றும் ஆட்சி அமைப்பது குறித்து பாரதிய ஜனதாவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் சிவசேனவிடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், பாரதிய ஜனதாவுக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரிய ஆட்கள் என்றும் கூறினார். 

ஆட்சியில் சமமான பங்கு என்ற உடன்பாடு மகாராஷ்டிரா மக்கள் முன்னிலையில் எட்டப்பட்டு, அதன் அடிப்படையிலேயே பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதாவுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியும், 50 சதவிகிதம் அமைச்சர் பதவியும் தரவேண்டும் என சிவசேனா உறுதியாக உள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள பாரதிய ஜனதா, தேவேந்திர ஃபட்னாவிஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளும் முதல்வராக நீடிப்பார் எனக்கூறி வருகிறது.