ஓளரங்கசீப் கல்லறை PTI
இந்தியா

ஒளரங்கசீப் கல்லறை | அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்.. மார்ச் 25 முதல் ஏப்ரல் 8 வரை தடை உத்தரவு!

”ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டாம். அதற்குப் பதில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் சத்ரபதி சாம்பாஜிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Prakash J

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில், ”ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டாம். அதற்குப் பதில் மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் சத்ரபதி சாம்பாஜிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

ஒளரங்கசீப் கல்லறை

இதுகுறித்து அவர், “ஔரங்கசீப்பின் கல்லறை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆகையால், ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டாம். ஆனால் சம்பாஜி நகரில் சத்ரபதி சாம்பாஜி ராஜேவுக்கு ஒரு பெரிய நினைவிடம் அமைக்க வேண்டும்.

நாம் சம்பாஜி மகாராஜின் சித்தாந்தத்துடன் முன்னேற வேண்டும். ஆனால் நாட்டில் அமைதி நிலவ வேண்டும். முஸ்லீம் சமூகத்திடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் ஔரங்கசீப்புடன் உங்களை இணைத்துக் கொள்ளக்கூடாது. இங்குள்ள முஸ்லிம்கள் இந்துக்களாக இருந்தனர். இங்குள்ள முஸ்லிம்கள் ஔரங்கசீப்பின் குழந்தைகள் அல்ல. அவர்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிரான போராட்டங்களைக் கருத்தில் கொண்டும், வரவிருக்கும் பண்டிகைகளின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 8 வரை இந்த தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் என காவல் துறை தெரிவித்துள்ளது. அனுமதியின்றி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தவோ அல்லது பேரணி நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலகட்டத்தில் கோஷங்கள் எழுப்பவோ, சத்தமாய்ப் பேசவோ, ஆயுதங்கள் எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

mumbai

சத்ரபதி சம்பாஜி மகாராஜின் நினைவு நாள் (மார்ச் 29), குடி பத்வா விழா (மார்ச் 30), ஈத், ஜூலேலால் ஜெயந்தி (மார்ச் 31) மற்றும் ராம நவமி (ஏப்ரல் 6) உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மகாராஷ்டிராவில் கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.