இந்தியா

ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சி கைது

ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சி கைது

JustinDurai
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முக்கிய சாட்சியான கிரண் கோஸாவி கைது செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டவர் கிரண் கோஸாவி. கப்பலில் சோதனையின் போதும் பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திலும் ஆர்யன் கானுடன் கோஸாவி இருக்கும் செல்ஃபி வீடியோக்கள் வெளியாகின. இவ்விரண்டு இடங்களிலும், சாட்சியான இவர் வந்தது எப்படி என மகராஷ்டிராவில் ஆளும் கூட்டணி கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் கோஸாவியின் பாதுகாவலர் என சொல்லிக்கொண்டு பிரபாகர் சயில் என்பவர் அவர் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க கோஸாவி பேரம் பேசியதை தாம் கேட்டதாக கூறியிருந்தார்.
இதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரி சமீர் வான்கடேவுக்கு 8 கோடி ரூபாய் தரவேண்டும் என பேசியதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை கோஸாவி மறுத்ததுடன், பிரபாகர் செயில் பொய் சொல்வதாகவும் கூறியிருந்தார்.மகாராஷ்டிரா காவல்துறையிடம் தாம் அச்சம் கொண்டிருப்பதாகவும் உத்தரபிரதேச காவல்துறையிடம் சரணடைய விரும்புவதாகவும் கோஸாவி தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக புனே காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மோசடி வழக்கு தொடர்பாக அவர் கைதாகியிருப்பதாக புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா தெரிவித்தார்.