இந்தியா

கொரோனா பரவல் அச்சம்: இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மகாராஷ்டிரா

Veeramani

ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மகாராஷ்டிரா வரும் பயணிகள் 14 நாள் அரசு முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள், மாநிலத்தில் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பன போன்ற புதிய கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு விதித்துள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உக்கிரமடைந்த பாதிப்புகள் காரணமாக, ஜனவரி 5-ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மும்பை மற்றும் மாநிலத்தின் அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வரும்  விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிவரை தடைவிதித்துள்ள நிலையில், இங்கிலாந்து தவிர வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தோ இந்தியா வரும் பயணிகள் 14 நாள்கள் அரசின் மையத்தில் தனிமைப்படுத்தபடுவார்கள், மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களும் இதேபோன்ற வீட்டுத் தனிமைப்படுத்தலைக் கடைபிடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அரசாங்கம் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், "பீதி அடையத் தேவையில்லை" என்றும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸின் உக்கிரமான அடுத்தக்கட்ட பாதிப்பு செப்டம்பர் மாதம் தென்கிழக்கு இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது தற்போது இங்கிலாந்தின் பிற பகுதிகளில் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.