சரத்பவார், சுப்ரியா சுலே, அஜித் பவார்
சரத்பவார், சுப்ரியா சுலே, அஜித் பவார் twitter
இந்தியா

தலைவரான மகள்.. டம்மியான அண்ணன் மகன்! மகாராஷ்டிராவில் ராஜதந்திரத்தைப் பயன்படுத்திய சரத் பவார்!

PT WEB

சமீபகாலங்களில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பல சட்டமன்ற உறுப்பினர்களை தன்னுடன் அழைத்துச் சென்று பாஜக கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளார் என மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், சென்ற மாதம் சரத் பவார் திடீரென தாம் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். அதற்கு கட்சியின் தலைவர்கள் அனைவரும் ’சரத் பவார் பதவியிலே தொடர வேண்டும் எனவும், அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் அவருக்கே உள்ளது’ எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து, அஜித் பவாருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வெளியேற மாட்டார்கள் என்கிற சூழல் உருவானது.

பல நாட்கள் கட்சித் தலைவர்களைக் காக்க வைத்த பிறகு சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக தொடர ஒப்புக்கொண்டார். அதே சமயத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்க்கும் எண்ணமே கிடையாது என்றும், அடுத்த வருட மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளுடன் மகா விகாஸ் அகாடியில் தொடரும் எனவும் அஜித் பவாருக்கு ’செக்’ வைத்தார்.

இந்த நிலையில் சுப்ரியா சுலே கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டு, சரத் பவாரின் வாரிசாவார் என செய்தி கசிந்தது. அதேநேரத்தில், அஜித் பவாரின் முக்கியத்துவம் குறையாது எனவும் மகாராஷ்டிர மாநில முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அவரிடம் இருக்கும் எனவும் சரத் பவார் தரப்பு விளக்கங்களைக் கசிய விட்டது. மேலும், சுப்ரியா சுலே டெல்லியில் கட்சியின் தேசிய விவகாரங்களைக் கவனிப்பார் எனவும் சமாதானமும் அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நியமனங்களின்படி, சுப்ரியா சுலே செயல் தலைவர் பதவியில் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்குப் பொறுப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மிகவும் முக்கிய மாநிலமான மகாராஷ்டிராவின் பொறுப்பு சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதைவிட முக்கியமாக கட்சியின் தேர்தல் குழுவுக்கு சுப்ரியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அடுத்த வருட மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கான தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை சுப்ரியாவே தேர்ந்தெடுப்பார் என்பது தெளிவாகிறது.

இத்தகைய சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் சுப்ரியாவின் ஆதரவளாளர்களாக அவரது முகாமில் இணைந்துவிடுவார்கள் என்பது கட்சித் தலைவர்களின் கருத்து. இந்த நிலையில், அஜித் பவார் ஆதரவு முகாம் மேலும் பலவீனமடையும் என அவர்கள் கணித்துள்ளனர். அஜித் பவர், சரத் பவாரின் அண்ணன் மகன். கட்சியின் மகாராஷ்டிரா மாநில விவகாரங்களை இவரே கவனித்துவந்த நிலையில், கட்சியில் சரத் பவாருக்கு அடுத்த தலைவராக இவர் பார்க்கப்பட்டார். ஆகவே அவர் கட்சியைவிட்டு விலகி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக கூட்டணியில் இணைவது வலுவான தாக்கத்தை உண்டாக்கும் என கருதப்பட்டது. இனி அவருக்கு அதிக ஆதரவு இருக்காது எனவும் அஜித் பவார் கட்சியைவிட்டு வெளியேறினாலும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடன் பயணிக்க மாட்டார்கள் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். இனி அஜித் பவார் மூலம் பிளவு இல்லை என்கிற சூழலை சரத் பவார் தனது ராஜதந்திரத்தின் மூலம் உருவாக்கிவிட்டார் என்பது அவர்களின் நம்பிக்கை.

மகா விகாஸ் அகாடி உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடத்தியபோது, அஜித் பவார் துணை முதல்வராக இருந்தார். தற்போது அவர் மகாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறி நீடித்தபோது, திடீரென அஜித் பவார் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர பட்னாவிஸுடன் கைகோர்த்து துணை முதல்வராகப் பதவி ஏற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ’பாஜகவுக்கு ஆதரவில்லை’ என வலியுறுத்திய சூழலில், அந்தக் கூட்டணி அரசு நீடிக்கவில்லை. பின்னர் மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சிக்கு வந்த சூழலில், சரத் பவார் துணை முதல்வர் பதவியை அஜித் பவாருக்கு அளித்தார். சிவசேனா உடைந்ததால், தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா சட்டசபையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அஜித் பவார் தலைமையில் செயல்படுகிறது.

சிவசேனா பிளவு தொடர்பான வழக்குகளில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு பின்னடைவு ஏற்படலாம் எனப் பேசப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா அரசைக் காக்க பாஜக தலைவர்கள் அஜித் பவாரை தங்கள் வசம் இழுக்க முயற்சி செய்வதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. பாஜக கூட்டணியில் துணை முதல்வராகப் பதவியேற்ற போதும், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்து விடுவார் எனப் பேசப்பட்ட போதும், அஜித் பவார் இதையெல்லாம் மறைமுகமாக சரத் பவார் சம்மதத்துடன் செய்கிறாரோ எனக் கேள்வி எழுந்து வந்தது. அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவாரின் வாரிசாக நியமிக்கப்படுவார் எனவும் பேசப்பட்டது.

இத்தகைய குழப்பங்களை சரத் பவார் நீக்கி, தனது மகள் சுப்ரியா சுலேதான் கட்சியில் தனது அரசியல் வாரிசு என தெளிவுபடுத்தி உள்ளார். இதனால் அதிருப்தியில் அஜித் பவார் கட்சியைவிட்டு வெளியேற இயலாதபடி தந்திரமாக சரத் பவார் வலை பின்னி உள்ளார். அவரது நோக்கங்கள் வெளிப்பட தெரியாத வகையில் தனது நெருங்கிய சகாவான பிரபுல் படேலை இன்னொரு நிர்வாகத் தலைவராக நியமித்துள்ளார். படேலுக்கு குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் கோவா ஆகிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத மாநிலங்களே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்