நிதேஷ் ரானா எக்ஸ் தளம்
இந்தியா

”கேரளா ஒரு மினி பாகிஸ்தான்” - சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாராஷ்டிரா பாஜக அமைச்சர்!

”கேரளா ஒரு மினி பாகிஸ்தான்” என மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

Prakash J

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவாரும் பதவியேற்றனர்.

இந்த அமைச்சரவையில், பாஜகவைச் சேர்ந்த நிதேஷ் ரானே மீன்வளத்துறை அமைச்சராக அங்கம் வகிக்கிறார். இவர், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகன் ஆவார். இந்த நிலையில் இவர், ‘கேரளாவை மினி பாகிஸ்தான்’ எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல், பிரியங்கா

புனே மாவட்டம் புரந்தர் தாலுகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிதேஷ் ரானே, "கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்துப் பெண்கள் லவ் ஜிகாத் மூலம் டார்கெட் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலத்தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர்.

பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால் தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

அவருடைய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே, ”இதைச் செய்ய மட்டுமே அவர் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரிடம் நான் கேட்க விரும்புகிறேன். அமைச்சராக இருக்கும் நிதேஷ் ரானே, இறையாண்மை மற்றும் அரசியலமைப்பின் உறுதிமொழியை எடுத்துள்ளார். இந்தியாவின் ஒருமைப்பாடு, நாட்டின் ஒரு மாநிலத்தை அவர் அங்குள்ள வாக்காளர்களை 'பயங்கரவாதிகள்' என்று அழைக்கிறார். அமைச்சர் பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இருக்கிறதா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதேஷ் ரானே

இந்த விவகாரம் முற்றியதைத் தொடர்ந்து ரானே விளக்கம் அளித்துள்ளார். அவர், "கேரளா இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. இருப்பினும், இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து வருவது அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்று. இந்துக்கள் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் (இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்கள்) மதமாற்றம் செய்வது அங்கு அன்றாட விஷயமாகிவிட்டது. இந்து நாடு, இந்து நாடாகவே இருக்க வேண்டும். இந்துக்கள் எல்லா வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைப்போல் இந்தியாவில் நடந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். லவ் ஜிகாத் வழக்குகளில் இந்து பாகிஸ்தானில் உள்ள சூழ்நிலையை கேரளாவில் நான் ஒப்பிட்டுப் பார்த்து எனது உரையில் சொல்ல முயன்றேன். நான் உண்மையை மட்டுமே தெரிவித்தேன். 12 ஆயிரம் இந்துப் பெண்கள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவதைத் தடுத்து அவர்களுக்கு உதவிய ஒரு நபரிடம் தாம் இருந்தேன். வயநாடு தொகுதியில் ராகுலும் பிரியங்காவும் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாலேயே வெற்றிபெற்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், நிதேஷ் ரானே இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்வது முதல்முறையல்ல. ஏற்கெனவே முஸ்லிம்கள் பற்றித் தவறான கருத்தைக் கூறியுள்ளார். அதுதொடர்பாக அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.