இந்தியா

5 மணி நேர விசாரணைக்கு பின் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது - நடந்தது என்ன?

ஜா. ஜாக்சன் சிங்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி மகாராஷ்ட்ரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நவாப் மாலிக். தேசியவாத காங்கிரஸின் முக்கிய தலைவராக கருதப்படும் இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பேச்சு அடிபட்டது. அந்த சமயத்தில், தாவூத் கூட்டாளிகளிடம் இருந்து பல ஏக்கர் நிலம் ஒன்றினை நவாப் மாலிக் மிகக்குறைந்த விலைக்கு வாங்கியதாகவும், இதில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நவாப் மாலிக், தாவூத்தின் சகோதரர் இக்பால் கஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு மகாராஷ்டிரா அரசு கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. மேலும், இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், இன்று காலை அமைச்சர் நவாப் மாலிக்கின் இல்லத்துக்கு சென்ற அமலாக்கத்துறையினர், அவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 5 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக முகாந்திரம் இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.