model image x page
இந்தியா

மகாராஷ்டிரா | முதலாளியுடன் உறவு வைக்குமாறு மிரட்டிய கணவர்.. மறுத்ததால் மனைவிக்கு ’தலாக்’!

இஸ்லாம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னும் ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை இருக்கிறது.

Prakash J

இஸ்லாம் சமூகத்தில், ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலும் தொடர்ந்தது. இதனால் அச்சமூகப் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடைசெய்யும் வகையில் முத்தலாக் என்னும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டம் ஆகஸ்ட் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் ’தலாக்’ முறையில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு நீதி கிடைத்தது. மேலும், அவர்களுக்கான உரிமையும் கிடைக்கப் பெற்றது.

model image

இஸ்லாம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கிறது. எனினும், இன்னும் சில இஸ்லாம் மக்களிடையே இதுபோன்ற ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையில் இருக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகரைச் சேர்ந்த ஒருவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவர், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி, தனது மனைவியை அலுவலக பார்ட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை, தனியறையில் நிறுவன முதலாளியிடம் உறவுகொள்ள வலியுறுத்தியதாகவும் அதற்கு அந்தப் பெண் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உடல்ரீதியாகத் தாக்கியுள்ளார்.

மேலும், விவாகரத்து பெற்ற முதல் மனைவிக்கு வழங்க ரூ.15 லட்சம் ஏற்பாடு செய்து வா எனக் கூறி வீட்டைவிட்டுத் துரத்தியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, உடனே மூன்று முறை முத்தலாக் கூறி அவரை வீட்டைவிட்டு அடித்து விரட்டியுள்ளார். இவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரியில்தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சம்பாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்த இன்ஜினியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, இதேபோன்று முதல் மனைவியையும் அவர் கொடுமைப்படுத்தி, விவாகரத்து செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

model imae

கடந்த காலங்களில், சிறுநீரக தானம் செய்த பெண், கணவனைக் கேட்காமல் புருவத்தை அலங்கரித்த பெண், பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் புகழ்ந்த பெண் உள்ளிட்டவர்களுக்கும் அவர்களது கணவன்மார்கள் முத்தலாக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.