மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் இன்று பதவியேற்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மும்பையில் உள்ள சட்டப்பேரவையில் 288 எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னதாக பதவியேற்பிற்காக சட்டப்பேரவைக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே வரவேற்றார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏக்களையும் அவர் வரவேற்றார்.
முன்னாள் துணை முதல்வரான அஜித்பவாரும் சட்டப்பேரவைக்கு வருகைத் தந்தபோது சுப்ரியா சுலே கட்டி அணைத்து அவரை வரவேற்றார். இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெற்றது. இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகியிருக்கும் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே உள்பட அனைவரும் பதவியேற்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 33 நாட்களுக்குப் பிறகு எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.