மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்  முகநூல்
இந்தியா

மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கியது!

மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.

PT WEB

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தல்!

288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்ட்ரா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகா யூதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே, இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

மகா யூதி கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 149 தொகுதிகளிலும், ஏக் நாத் ஷின்டேவின் சிவசேனா பிரிவு 81 தொகுதிகளிலும், போட்டியிடுகிறது. அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் கட்சி 101 இடங்களிலும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா 95 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் 86 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. மொத்தம் களத்தில் உள்ள 4 ஆயிரம் வேட்பாளர்களில், 2 ஆயிரம் வேட்பாளர்கள் சுயேச்சைகள். மேலும், வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை வாக்குப்பதிவு!

81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13 ஆம்தேதி நிறைவடைந்தது. எஞ்சிய 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது.

முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் அமர் குமார் பௌரி உள்ளிட்ட 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் . காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. 1 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.