தேவேந்திர ஃபட்னாவிஸ் எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா | 1 - 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்.. கிளம்பிய எதிர்ப்பால் பின்வாங்கிய ஃபட்னாவிஸ் அரசு!

மராத்தி மற்றும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தியை மூன்றாம் மொழியாக கட்டாயமாக்கும் உத்தரவை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்துள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் துணை முதல்வர்களாக உள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் புதிய கல்விக் கொள்கையை பாஜக கூட்டணி அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கைபடி, அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ”அனைவரும் மராத்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், நம் நாட்டின் பிற மொழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு இதுகுறித்து யோசித்துள்ளது. நம் நாட்டில் ஒரு தொடர்பு மொழி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. அதன்பேரிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிரா, இந்தி

ஏற்கெனவே மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதே எதிர்ப்பு அலை மகாராஷ்டிராவிலும் எழுந்தது. குறிப்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவரான ராஜ் தாக்கரே, ”மகாராஷ்டிராவை இந்தி என்று சித்தரிக்க முயற்சித்தால், இங்கு ஒரு போராட்டம் நிச்சயம் இருக்கும்” என அவர் எச்சரித்திருந்தார். அதுபோல் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் எச்சரித்திருந்தது. இதுதவிர, காங்கிரஸும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதில், மும்மொழிப் பிரச்னைக்காக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கரே சகோதரர்கள் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

மும்மொழிப் பிரச்னைக்கு மராட்டியத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தியை மூன்றாம் மொழியாக கட்டாயமாக்கும் உத்தரவை மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதா பூஸ் தெரிவித்துள்ளார்.