ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. இந்த நீக்கத்தை அடுத்து வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்குவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர பாஜக அரசு முதன் முதலாக ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இரண்டு சுற்றுலா விடுதிகள் கட்டுவதற்கு இந்த நிலத்தை மகாராஷ்டிர அரசு வாங்குகிறது. இதற்காக, ஒவ்வொரு விடுதிக்கும் தலா ரூ1 கோடி ஒதுக்கீடு செய்ய மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு விடுதிகள் கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கான பணிகள் 15 நாட்களுக்குள் முடியும் என தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரை மற்றும் வைஷ்ணவ தேவி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக இந்த விடுதிகள் கட்டுப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்குமார் ராவல் கூறிய போது, “மகாராஷ்டிர சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் இரண்டு நட்சத்திர விடுதிகள் கட்ட முடிவு செய்துள்ளது. லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒரு ரிசார்ட் கட்டப்படவுள்ளது. ஸ்ரீநகரில் இதற்கான இடத்தை தேடும் பணிகள் தொடங்க உள்ளோம். விமான நிலையத்திற்கு அருகில் அந்த இடம் அமையும்” என்றார்.