maharashtra
maharashtra twitter
இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு மசோதா: மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றம்!

Prakash J

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே, இடஒதுக்கீடு கோரி கடுமையாகப் போராடி வருகிறார். அவ்வப்போது உண்ணவிரதப் போராட்டங்களையும் நடத்தினார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 20ஆம் தேதி, ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி மனோஜ் ஜராங்கே நடைப்பயணத்தைத் தொடங்கியதுடன், 15,000 பேர் சுமார் 750 வாகனங்களில் சென்றனர். இதனால் மும்பையே ஸ்தம்பித்தது. அப்போது, ’தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’ என்று மனோஜ் ஜராங்கே எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. இதனையடுத்து, மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜுக்கு பழச்சாறு கொடுத்து அவரது உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.

இந்த நிலையில், இன்று மகாராஷ்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மராத்தா இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இன்று ஒருநாள் நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த புதிய மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் மராத்தாக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும், ’மகாராஷ்டிர மாநில சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியோருக்கான மசோதா 2024’ தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினராக அறியப்படும் மராத்தா வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க இந்த புதிய மசோதா வழிவகை செய்கிறது.

இதனிடையே, மகாராஷ்டிராவில் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.