மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், டெல்லியில் இன்று நடைபெற உள்ள இரு சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முதலமைச்சர் பதவியை கட்டாயம் தர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வரும் நிலையில், அதை விட்டுத்தரும் மனநிலையில் பாஜக இல்லை. இச்சூழலில் பாரதிய ஜனதாவை புறந்தள்ளும் வகையில் தனித்து ஆட்சி அமைக்க தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதிய அரசு அமைப்பது தொடர்பாக எந்தவொரு கெடுவையும் அறிவிக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.
இரண்டரை ஆண்டுகள் என சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி அளிப்பதற்கு பாரதிய ஜனதா முன் வராததால், சிவசேனா தனித்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதை உறுதி செய்யும் வகையில் சிவசேனா மூத்த தலைவர் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் செய்தியாளர்களிடம் இதை பகிரங்கப்படுத்திய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், தமக்கு ராவத் குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதாகக் கூறினார்.
சிவசேனாவுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ராவத் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்றும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சிவசேனாவின் சஞ்சய் ராவத், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசுகிறார். முன்னதாக மராட்டிய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சஞ்சய் ராவத், அதிக இடங்களில் வென்ற கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்றார்.
இதனிடையே டெல்லியில் இன்று நடைபெறும் இரு சந்திப்புகள் மகாராஷ்டிரா அரசியல் தேக்கநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செல்லும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.
சிவசேனாவை சமாதானப்படுத்தும்படி ஏதாவது திட்டங்களை பாஜக முன்வைக்கும் நிலையில், பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி மீண்டும் அமையலாம். அதேநேரத்தில் சிவசேனாவுக்கு தேசிய வாத காங்கிரஸும், காங்கிரஸும் ஆதரவு அளித்தால், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.