மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் சிவசேனா நேற்று ஈடுபட்டது.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இருகட்சிகளும் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். சந்திப்பின் போதும் ஆட்சி அமைப்பதற்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி கூடுதல் அவகாசம் வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
அதனையடுத்து, பாஜக, சிவசேனாவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) க்கு ஆளுநர் பகத் சிங் கோஷாரி நேற்றிரவு 8.30 மணியளவில் அழைப்பு விடுத்தார். என்சிபி தலைவர்களும் நேற்றிரவே ஆளுநரை சந்தித்தனர். அப்போது, இன்றிரவு 8.30 மணி வரை ஆட்சி அமைக்க என்சிபிக்கு ஆளுநர் நேரம் வழங்கினார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான நேரம் இன்று இரவு 8.30 மணிவரை உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் எப்படி பரிந்துரை செய்ய முடியும் என காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார்.