கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மும்பையில் ஊரடங்கு உத்தரவு 2 வாரம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸால் இதுவரை உலகில் 14 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,421 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 5,360 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 164 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.
குறிப்பாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. எனவே இந்த இரண்டு நகரங்களில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்யலாம் என அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் முதல்முறையாக வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மும்பை, புனேவுடன் கொரோனா அதிகம் பரவியிருக்கும் மேலும் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் எனப்படுகிறது.
இதேபோன்று, தமிழகத்தில் ஒருவேளை குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்தால், அதில் சென்னை தான் முதல் இடம் பிடிக்கும். ஏனென்றால் தமிழகத்திலேயே அதிக பாதிப்பு சென்னையில் தான் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 690 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 149 பேருடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. எனவே சென்னைக்கு மட்டுமோ அல்லது சென்னையுடன் சேர்த்து கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கோ ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.