மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் மாணவர்களுக்கு நன்மையா தீமையா என ஆய்வு செய்ய இருப்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரும் மசோதா பேரவையில் நிறைவேறியுள்ள நிலையில் நீட் தேர்வு குறித்து தேசிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் அமித் தேஷ்முக், இது தொடர்பாக அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு நன்மை, தீமை இரண்டும் சீர்தூக்கி பார்க்கப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
முன்னதாக நீட் தேர்விலிருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் நானா பட்டோல் வலியுறுத்தினார். மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களை விட சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.