இந்தியா

“வாக்குச் சீட்டு என்பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா

webteam

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்த சில கட்சிகள் வலியுறுத்தியதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி முடிவடைகிறது. எனவே அம்மாநிலத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையிலான குழு நேற்று மகாராஷ்டிரா சென்றது. அங்கு மாநில நிர்வாகம், காவல்துறை மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியவர்களுடன் இந்தக் குழு ஆலோசனை நடத்தியது. 

இதனைத் தொடர்ந்து இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தீபாவளிக்கு பிறகு நடத்த வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. மேலும் சட்டப் பேரவைத் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று சில கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்த முடியாது என்று நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம். வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது தற்போது ஒரு வரலாறே ஆகும். அது இப்போது சாத்தியமில்லை” எனத் தெரிவித்தார். 

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 288 இடங்கள் உள்ளன. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.