மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவின் தாக்கத்தால் மகா விகாஸ் ஆகாடி மற்றும் I.N.D.I.A. கூட்டணியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு இந்துத்துவா கொள்கையை தேர்தல் தோல்விக்கு பிறகு வலியுறுத்துவதாக குற்றம்சாட்டி உள்ள சமாஜ்வாதி கட்சி, மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியாக செயல்படும் மகா விகாஸ் அகாடியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா பிரிவு சில நேரங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலி போல செயல்படுவதாக ஆதித்ய தாக்கரே குற்றம் சாட்டியதால் கூட்டணியில் குழப்பம் தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி I.N.D.I.A. கூட்டணியை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தேசிய அளவிலும் குழப்பம் உருவாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியால் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த முடியவில்லை எனவும் காங்கிரஸ் தலைவர்களால் கூட்டணியை வழிநடத்த இயலாத சூழலில், தான் கூட்டணியை நடத்த தயாராக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய குழப்பங்கள் வெடித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை கேள்விக்குறியாக உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சனம் செய்து வருகிறது.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கமாக உள்ள சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாராட்டுவதை சமாஜ்வாதி கட்சி கண்டித்துள்ளது. சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால் இந்துத்துவா சித்தாந்தத்தை உத்தவ் தாக்கரே அணி வலியுறுத்துவதாக சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா பிரிவு தலைவர் அபு ஆஸ்மி விமர்சனம் செய்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் மெலிந்து நார்வேக்கர் சமீபத்தில் பாபர் மசூதியை 1992 ஆம் வருடம் இடித்தவர்களை பாராட்டி வெளியிட்ட கருத்துக்களை உத்தவ் தாக்கரே ஆமோதிப்பது சரியல்ல என அவர் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த போது விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு “நாங்கள் எப்போதும் இதயத்தில் ராமரைக் கொண்டு எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்” என ஆதித்ய தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இணைவதற்கு முன்பு சிவசேனா மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மாநில அரசில் அங்கம் வகித்தது. பின்னர் சிவ சேனா கட்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியாக செயல்பட்டு வருவதால் கொள்கை முரண்பாடுகள் இருந்து வருவதாக மகாராஷ்டிரா மாநில அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சமாஜ்வாதி கட்சிக்கு போதிய தொகுதிகளை ஒதுக்கவில்லை என சர்ச்சை உண்டானது. சட்டமன்ற தேர்தலில் மகா விகாஸ் அகாடி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவை சனிக்கிழமை புறக்கணித்தனர். ஆனால் அபூ ஆஸ்மி மற்றும் அவருடன் இன்னொரு சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில்தான் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மற்றும் சமாஜ்வாதி கட்சி இடையே மோதல் முற்றியுள்ளது. மதச்சார்பற்ற கொள்கை உள்ள தங்கள் கட்சி சிவசேனாவின் கருத்துக்களை ஏற்க முடியாது என அபூ ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி அசுர பலத்துடன் வெற்றி பெற்றதற்கு I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூட்டணியை வெற்றிகரமாக நடத்த நான் தயார் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வெற்றிகரமாக நடத்தவில்லை என்பதை அவர் சூசகமாக குறிப்பிட்டு காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கெனவே பலமுறை மம்தா பானர்ஜி தனது திரிணமூல் கட்சி தனியாகவே போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் என குறிப்பிட்டு, மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்க மறுத்து வட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியுடன் ஏற்கனவே மம்தா பானர்ஜிக்கு அரசியல் எதிர்ப்பு உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆகவே மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையாத நிலை உள்ளது.
இதேபோல் I.N.D.I.A. கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி விரைவில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளது. முதலில் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் பின்னர் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி என இரண்டு பின்னடைவுகள் காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக I.N.D.I.A. கூட்டணியில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாடு மற்றும் பிஹார் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் நிலையில், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அத்தகைய சூழல் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தொகுதிகளை ஒதுக்க தயாராக இல்லை என்பதால், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை எதிர்க்கட்சிகள் கைப்பற்றிய நிலையில் ஊக்கத்துடன் ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் பல்வேறு குழப்பங்களை மீண்டும் சந்திக்கின்றனர்.