மகாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளன. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியில் உள்ளனர். மூன்று கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மற்றும் மராத்தி மொழிப் பற்றிய பேச்சுகள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. சமீபத்தில், மராத்தி மொழி தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் பய்யாஜி ஜோஷி, ”மும்பைக்கு ஒரே மொழி இல்லை என்றும், மும்பைக்கு வரும் மக்கள் மராத்தி மொழியை கற்க வேண்டிய கட்டாயம் இல்லை” எனவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மகா விகாஸ் அகாடி கூட்டணியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் கருத்து தெரிவித்திருந்தார். அவர், “மராத்திதான் நம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி; இந்த மாநிலத்தில் உள்ள அனைவரும் மராத்தியை கண்டிப்பாக கற்க வேண்டும்; மதிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியிலும் கலாசாரத்திலும் மராத்திக்கு முக்கியப் பங்குள்ளது” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”மகாரஷ்டிரத்தில் மாநில அரசு பணியாளர் தேர்வுகள் அனைத்தும் மராத்தி மொழியில் நடத்தப்படும்” என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். மேலவையில் நடந்த விவாதத்தில் சிவசேனை உத்தவ் தாக்ரே பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏ மிலிந்த் நார்வேகர், மாநில அரசு பணிகளில் வேளாண்மை மற்றும் பொறியியல் தொடர்பான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஃபட்னாவிஸ், ”வேளாண்மை மற்றும் பொறியியல் துறைகளுக்கான பாடப் புத்தகங்கள் மராத்தி மொழியில் இல்லாததால் அவற்றுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பாடப் புத்தகங்கள் விரைவில் மராத்தி மொழியில் அச்சிடப்படும் என்றும் மாநில அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளும் மராத்தி மொழியிலும் நடத்தப்படும்” என்றும் ஃபட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.