தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளம்
இந்தியா

இந்து, பௌத்தர், சீக்கியர் தவிர மற்ற அனைவரின் பட்டியல் சான்றிதழ்கள் ரத்து.. ஃபட்னாவிஸ் அறிவிப்பு

இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Prakash J

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளார். இந்த நிலையில், இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

fadnavis

இதுகுறித்து சட்டமன்ற மேலவையில் 'கவனம் கோரும்' தீர்மானத்திற்கு பதிலளித்த அவர், ”வற்புறுத்தல் மற்றும் ஏமாற்றுதல் மூலம் மத மாற்ற வழக்குகளை கையாள்வதற்கு வலுவான விதிகளை மாநில அரசு கொண்டு வர விரும்புகிறது. நவம்பர் 26, 2024 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் பட்டியல் சாதியினர் பிரிவு இடஒதுக்கீட்டை இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் மட்டுமே பெற முடியும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்தியது. அதன்படி, இந்து மதம், புத்த மதம் மற்றும் சீக்கியம் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எஸ்சி சான்றிதழ் அல்லது இடஒதுக்கீடு பெற்றிருந்தால், அவர்களின் செல்லுபடியாகும் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உரிய நடைமுறையுடன் ரத்து செய்யப்படும். அரசு வேலைகள் போன்ற சலுகைகளை யாராவது பெற்றிருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை உரிய எடுக்கப்படும். மோசடியாகப் பெற்ற சாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சலுகைகளைப் பெற்றவர்களிடமிருந்து பணப் பலன்களை மீட்க பரிந்துரைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இடஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்த மத சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பாஜக தலைவர் அமித் கோர்கே குற்றம்சாட்டியிருந்தார்.