இந்தியா

மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம்பிடிக்கப் போகிறவர்கள் யார்? தீவிர ஆலோசனையில் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம்பிடிக்கப் போகிறவர்கள் யார்? தீவிர ஆலோசனையில் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை அமைக்கும் பணிகள் தீவிரமாக உள்ள சூழலில் டெல்லியில் பாஜக தலைவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

மகாராஷ்டிர அரசியலில் நீடித்த நீண்ட காலத்திற்குப் பிறகு மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றனர். பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் முதலமைச்சர் பதவி ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் பட்னாவிஸ் நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை ஏக்நாத் ஷிண்டே மற்றும் பட்நாவிஸ் இருவரும் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது புதிதாக முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு தனது வாழ்த்துக்களை ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்த ஆலோசனையும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடங்கள் வழங்கப்பட வேண்டும் என சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-களுள் ஒருவரும், மாநில முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே கேட்டுக் கொண்டுள்ளார் என தகவல் தெரிவிக்கிறது.