ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான பிரஹன்மும்பை மாநகராட்சியில் (BMC) 130க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக-சிவசேனா கூட்டணி கைப்பற்றும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் மாநகராட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 893 வார்டுகளில் உள்ள 2,869 இடங்களுக்கு காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. சுமார் 3.48 கோடி வாக்காளர்கள் 15,931 வேட்பாளர்களில் இருந்து தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கத் தகுதி பெற்றிருந்தனர். மும்பையில், 227 பிஎம்சி இடங்களுக்கு 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆண்டுக்கு ரூ. 74,400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டைக் கொண்ட இந்த மாநகராட்சி, நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு தேர்தலைச் சந்தித்தது. இதில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜக-சிவசேனா கூட்டணி அமோக வெற்றிபெறும் என தெரிவிக்கின்றன.
பாஜக 138 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாகவும், சிவசேனா (UBT) 59 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் 23 இடங்களுடன் மூன்றாவது இடம் பெறும் எனவும் கணித்துள்ளன. மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சுமார் ஏழு இடங்களைப் பெறுவார்கள் என எக்ஸிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜக - சிவசேனா கூட்டணி தனியாகவும், சரத் பவார் - அஜித் பவார் இணைந்த தேசியவாத காங்கிரஸும், தாக்கரே சகோதரர்களின் கூட்டணியும் எனத் தனித்தனியாகப் போட்டியிட்டன. காங்கிரஸ் தனியாக களம் கண்டது. இதனால் பல முனைப் போட்டி ஏற்பட்டது. 227 பிஎம்சி இடங்களைக் கொண்ட மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற 114 இடங்கள் தேவை. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜனவரி 16) நடைபெறுகிறது. முன்னதாக, தாக்கரே சகோதரர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தனர்.