இந்தியா

கொரோனா: நவராத்திரியின் தாண்டியா, கர்பா நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த மகாராஷ்டிரா

Veeramani

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக நவராத்திரி விழாவின் தாண்டியா, கர்பா நிகழ்ச்சிகளுக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதனால் தொற்றுநோய் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நவராத்திரியின் போது கொண்டாடப்படும் தாண்டியா, கர்பா மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிகழ்வுகளுக்கு பதிலாக மக்களின் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான நிகழ்வுகள் மற்றும் இரத்ததான முகாம்களை நடத்துமாறு மண்டல்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி பண்டிகையின் முதல் மற்றும் கடைசி நாள் ஊர்வலங்களும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 13.66 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 10.69 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 36,181 பேர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.