ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளம்
இந்தியா

தமிழ்நாட்டு வழியை பின்பற்றியதால்..? பாஜக கூட்டணியின் வரலாறு காணாத வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்!

மகளிர் உதவித்தொகை திட்டத்தின் தாக்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் தீவிர பிரசாரம் காரணமாக மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாயூதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கணபதி சுப்ரமணியம்

மகாராஷ்டிரா| முன்னிலையில் பாஜக கூட்டணி

மகளிர் உதவித்தொகை திட்டத்தின் தாக்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் தீவிர பிரசாரம் காரணமாக மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாயூதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 132 தொகுதிகளில் முன்னணியில் உள்ள நிலையில், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு 53 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜீத் பவர் பிரிவு 40 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் எந்த கூட்டணியும் பெறாத வெற்றியாக 225 இடங்களில் மகாயூதி கூட்டணியில் முன்னணியில் உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் ஆகாடி 54 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

மாதம் 1500 ரூபாய் வழங்கும் மகளிர் உதவித்தொகை திட்டம் மகாயூதி கூட்டணி எதிர்பாராத அளவு வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தொடர்ந்து மகளிர் உதவித்தொகை கட்ட வேண்டும் எனவும் அது அதிகரிக்க வேண்டும் எனவும் கருதும் மகளிர் மகாயூதி கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என கருதப்படுகிறது. இந்த உதவித்தொகை மாதம் 2100 ரூபாயாக அதிகரிக்கப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ள நிலையில், நாங்கள் ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை அளிப்போம் என காங்கிரஸ் கூட்டணி வழங்கிய வாக்குறுதி மகா விகாஸ் ஆகாடிக்கு வெற்றியை பெற்று தரவில்லை.

யோகி ஆதித்யநாத் பிரசாரம்

இந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் மகாராஷ்டிரா தேர்தல் முடிவுக்கு பின்னணியில் உள்ள இரண்டு முக்கிய அம்சங்கள் என கருதப்படுகிறது. "பிரிந்தால் நாம் பாதிக்கப்படுவோம்" என இந்து சமுதாயம் ஒருங்கிணைந்து வாக்களிக்க உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தது எந்த அளவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் இந்துத்துவா முக்கிய இடத்தை பிடிக்கிறது என்பதை காட்டும் வகையில் இருந்தது. மகாராஷ்டிரா மாநில வாக்காளர்களில் 12 சதவீதம் இஸ்லாமிய வாக்காளர்கள் எனவும் அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் எனவும் பாஜக தலைவர்கள் கருதியதால் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. ஒற்றுமையாக இருந்தால் பத்திரமாக இருப்போம் என பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக இந்துத்துவா பிரச்சாரம் செய்தார்.

யோகி ஆதித்யநாத்

இத்தகைய சூழலில் ஆர்எஸ்எஸ் களமிறங்கி தீவிரமாக பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தது மகாயூதி கூட்டணிக்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது என கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக ஆர் எஸ் எஸ் உதவியின்றியே தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு பலமடைந்துள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பேசியிருந்தார். இதனால் ஆர்எஸ்எஸ் மக்களவைத் தேர்தலில் களத்தில் இறங்கவில்லை எனவும் ஆகவே தான் பாஜக பெரும்பான்மை பெற இயலவில்லை எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் ஆர் எஸ் எஸ் களப்பணி ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றியைப் பெற்று தந்ததைப் போலவே மகாராஷ்டிராவிலும் நடைபெற்று உள்ளது என மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

மகாயூதி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க காரணம்

வேளாண் சமூகத்தினர் சந்தித்த பிரச்சினைகள் மக்களவைத் தேர்தலில் மகாயூதி கூட்டணிக்கு எதிராக அமைந்த நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது மற்றும் 15 சதவீதம் வரை ஈரப்பதம் இருந்தாலும் சோயா பீன்ஸ கொள்முதல் செய்யலாம் என சலுகை அளித்தது ஆகியவை பாஜக கூட்டணிக்கு எதிரான வேளாண் சமுதாயத்தின் கோபத்தை குறைத்தது.

பருத்தி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இழப்பீடு அளித்தது உள்ளிட்ட முடிவுகளும் மகாயூதி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க காரணம் என கருதப்படுகிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது அவரை சந்திப்பதே கடினம் என புகார்கள் தொடர்ந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே இரவு நேரங்களில் கூட களத்தில் இறங்கி பணியாற்றியது பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக சார்பாக தேவேந்திர பட்னாவிஸ் ஒருங்கிணைத்த தீவிர பிரச்சாரம் மற்றும் அஜீத் பவார் தனது செல்வாக்கை மீட்டெடுக்க நடத்திய போராட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து மகாயூதி கூட்டணிக்கு வெற்றிகனியை வழங்கி உள்ளது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

அதே சமயத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி நீண்ட நாள் நீடித்தது உள்ளிட்ட பிரச்சனைகள் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவை பரிசளித்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என காங்கிரஸ் மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் போட்டியில் ஈடுபட்டது ஆகியவை மகா விகாஸ் அகாடி கூட்டணியை பாதித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசியலில் நெடுங்காலமாக கோலோச்சி வரும் சரத் பவார் உள்ளிட்டோருக்கு இந்த தோல்வி அரசியல் அஸ்தமனமாக கருதப்படுகிறது. மகாயூதி கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சுமூகமாக முடிவு செய்யாவிட்டால் பாஜக தலைமையிலான கூட்டணி பல்வேறு சவால்களை சந்திக்கும் என கருதப்படுகிறது.