ajit pawar team
ajit pawar team ani
இந்தியா

மும்பை: சரத் பவாரை திடீரென சந்தித்த அஜித் பவார் அணி! காரணம் என்ன?

Prakash J

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகிய அஜித் பவார், தன் ஆதரவாளர்களுடன் திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தார். பின்னர், அங்கு துணை முதல்வர் பதவியேற்றார். மேலும், தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தார். இது, மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது. இதையடுத்து, ’அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ என கட்சித் தலைவர் சரத் பவார் கூறியிருந்தார். அதில் சிலரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடமும் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அஜித் பவார் அணியினர் திடீரென, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒய்.பி.சவான் மையத்தில் நடைபெற்றது. அஜித் பவாருடன் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், சகன் புஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல் உள்ளிட்ட 8 அமைச்சர்களும் சென்றிருந்தனர்.

சரத் பவார் அணியினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல். “எங்கள் தலைவர் (கடவுள்) சரத்பவாரின் ஆசி வாங்க அவரைச் சந்தித்தோம். அவரின் அனுமதி பெறாமல் அவரைச் சந்தித்தோம். இங்கு வருவதாக எங்களுக்கு தெரிந்தது. இதனால், அவரின் ஆசியை வாங்க இங்கு வந்தோம்.

உங்களை (சரத்பவரை) மதிக்கிறோம் என அவரிடம் நாங்கள் தெரிவித்தோம். ஆனால், கட்சி ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அதனை அவர் சிந்திக்க வேண்டும். இதற்காக நாங்கள் அவருக்கு உதவ தயார். நாங்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார். ஆனால் அவர் (சரத் பவார்), பதில் எதுவும் அளிக்கவில்லை” என்றார்.

அஜித் பவார், சரத் பவார்

இந்த சந்திப்பின்போது சரத் பவார் அணியில் சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திரா அவாத் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.