மகாராஷ்டிரா இன்ஸ்டா
இந்தியா

மகாராஷ்டிரா | ரூ.20க்கு தாலி.. முதியவரின் காதல், ஒற்றுமைக்கு நகைக்கடை உரிமையாளரின் அன்பு பரிசு!

மகாராஷ்டிராவில் வயதான தம்பதியினரின் காதல் மற்றும் ஒற்றுமையைப் பார்த்து அவர்களுக்கு ரூ.20க்கு தாலியை வழங்கியுள்ளார்.

Prakash J

மனிதனின் ஆசைகள் அளவிட முடியாதவை. ஆகையால், அவையனைத்தும் நிறைவேறும் என எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில், ஒன்று இரண்டு நிறைவேறும் வகையில் சந்தர்ப்பங்களும் அமையலாம். அப்படியான ஒரு சந்தரப்பம் வயதான முதியவர் ஒருவருக்கு அமைந்துள்ளது.

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தில் வசித்து வருபவர் 93 வயதான நிவ்ருத்தி ஷிண்டே. இவரது மனைவி சாந்தாபாய். இந்த நிலையில், வட இந்தியாவில் விரைவில் ஆஷாதி ஏகாதசி பண்டிகை வர இருக்கிறது. இதற்காக, ஷிண்டே தன் மனைவிக்கு எப்படியாவது தங்கத்தில் தாலி ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இது, அவருடைய நேற்று, இன்றைய ஆசை அல்ல. 15 ஆண்டுகள் ஆசை.

மகாராஷ்டிரா

தனது மனைவிக்கு தாலி வாங்க வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தை நகைக்கடைக்காரர்களிடம் கூறியிருக்கிறார். இதற்காக, அவர் தாம் சேமித்து வைத்திருந்த ரூ.1,120 பணத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு சவரன் நகையே ஒரு லட்ச ரூபாயைத் தொட இருக்கையில், முதியவர் கொடுத்த ரூபாய்க்கு ஒரு குண்டு மணி அளவு தங்கம்கூட வாங்க முடியாது. அதிலும், இந்த ஆயிரம் ரூபாய்க்கு எப்படி ஒரு தாலியை வாங்க முடியும்? அது கனவிலும் முடியாத காரியம்.

இந்த விஷயம் அந்த முதிய தம்பதியர்களுக்கு தெரியுமோ, தெரியாதா? ஆனால், கடைக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். எனினும், இந்த தள்ளாத வயதிலும் அவர்களுடைய காதலையும் அன்பையும் பார்த்த கடை உரிமையாளர், அவர்களிடம் சம்பிரதாயத்துக்காக வெறும் ரூ.20ஐ மட்டும் பெற்றுக் கொண்டு மாங்கல்யத்தை வழங்கியிருக்கிறார். இதன்மூலம் கடை உரிமையாளர் அந்த முதியவரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். தவிர அவர்களுடைய ஒற்றுமையும் காதலும் தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிண்டே, "கடந்த 15 வருடங்களாக என் மனைவியிடம் சில தங்க நகைகளை வாங்கித் தருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இந்த நிலையில், நாங்கள் நகைக் கடைக்குச் சென்றபோது, ​​உரிமையாளர் நகைகளை எங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கடை உரிமையாளர், “அந்தத் தம்பதியினர் கடைக்குள் நுழைந்தனர், அந்த நபர் தனது மனைவிக்கு ஒரு மங்களசூத்திரம் வாங்க விரும்புவதாகக் கூறி ரூ.1,120 கொடுத்தார். அவரது சைகையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் அவரிடமிருந்து ரூ.20ஐ மட்டும் ஆசிர்வாதமாகப் பெற்று, மங்களசூத்திரத்தை அந்தத் தம்பதியினரிடம் கொடுத்தேன்” எனத் தெரிவித்தார்.

இந்த தருணத்தின் காணொளி ஆன்லைனில் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இந்த தம்பதியினருக்குப் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பயனர் ஒருவர், "உண்மையான காதல் இப்படித்தான் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இன்னொருவர், "வைரங்கள் வேண்டாம், ஆடம்பரமான பரிசுகள் வேண்டாம் - வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள். இந்த மனிதருக்கு வணக்கம்" எனப் பதிவிட்டுள்ளார்.