இந்தியா

சர்ச்சையான ஹிருத்திக் ரோஷன் விளம்பரம்! மன்னிப்பு கேட்ட சொமோட்டோ! என்ன காரணம்?

ச. முத்துகிருஷ்ணன்

சமீபத்தில் சொமோட்டோ நிறுவனம் வெளியிட்ட ஹிருத்திக் ரோஷன் நடித்த விளம்பரம் ஒன்று மஹாகாலேஷ்வர் கோயில் பூசாரிகள் உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமோட்டோவின் சமீபத்திய விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தோன்றி நடித்திருந்தார். அவ்விளம்பரத்தில் தமக்கு தாலி (Thaali - Food platter) சாப்பிடத் தோன்றியதால் அதை மஹாகல்லில் இருந்து ஆர்டர் செய்ததாக கூறியிருந்தார்.

இந்த மஹாகல் என்கிற வார்த்தை தங்களது கோயிலில் உள்ள கடவுளை குறிப்பதாகக் கூறி மஹாகாலேஷ்வர் கோயில் பூசாரிகள் சர்ச்சையை கிளப்பினர். தங்களது மத உணர்வுகளை இந்த விளம்பரம் புண்படுத்துவதாகக் கூறி அதை திரும்பப் பெற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மஹாகாலேஷ்வர் கோயில் நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும்.

மஹாகல் கோவில் அறக்கட்டளையின் தலைவரான உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், பக்தர்களுக்கு இலவசமாக தாலி பிரசாதம் வழங்கப்படுகிறது என்றும், இது உணவு டெலிவரி செயலி மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் விளம்பரத்தை விமர்சித்தார்.

இதையடுத்து சொமோட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வீடியோ ஒரு பான்-இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இதற்காக ஒவ்வொரு நகரத்திலும்  சிறந்த உள்ளூர் உணவகங்கள் மற்றும் அவற்றின் சிறந்த உணவுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். உஜ்ஜயினில் பிரச்சாரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் மஹாகல் உணவகமும் ஒன்று.

தாலி என்பது உஜ்ஜயினியின் மஹாகல் உணவகத்தின் மெனுவில் இருக்கும் ஒரு உணவு வகைதான். மரியாதைக்குரிய மஹாகாலேஷ்வர் கோயிலில் அல்ல. உஜ்ஜயினி மக்களின் உணர்வுகளை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய விளம்பரம் இனி ஒளிபரப்பாகாது. யாருடைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புண்படுத்த்தி இருந்தால் நாங்கள் இங்கு மன்னிப்புக் கோருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.