12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கொண்டாட்டமானது, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின்போது, 3 நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இதுவரை 15 கோடி பேர் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இன்று (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் பலத்த காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையே பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்த தற்போதைய நிலைமையை கேட்டறிந்துள்ளார். கூட்டநெரிசல் காரணமாக, சிறிது நேரம் புனித நீராடலுக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டது.