இந்தியா

வங்கிக்கணக்கில் வந்த ₹ 15 லட்சம் வரவு: 'ஹேப்பியான' விவசாயி செய்தது என்ன?

JustinDurai

விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம் 'டெபாசிட்' செய்யப்பட்டது. தேர்தலின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கருதிய அந்த விவசாயி, அந்த பணத்தில்  வீடு கட்டினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவில் வசிப்பவர் ஞானேஸ்வர் ஓட். இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் ஜன்தன் கணக்கு வைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று விவசாயியின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் ஆனது. இதனையறிந்த ஞானேஸ்வர், பிரதமர் மோடி தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக எண்ணியதுடன், பணம் டெபாசிட் செய்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும், தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை எடுத்து புதிதாக வீடு கட்டினார்.

ஆனால் அந்த பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தவறுதலாக ஞானேஸ்வர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. 6 மாதங்களாக பணம் வராததை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வங்கியில் விசாரணை நடத்திய போது தவறுதலாக ஞானேஸ்வர் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆனது தெரியவந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஞானேஸ்வருக்கு நோட்டீஸ் அனுப்பினர். வங்கிக்கணக்கில் மீதமிருந்த ரூ.6 லட்சத்தை வங்கி எடுத்து கொண்டது. வீடு கட்டுவதற்கு செலவிட்ட ரூ. 9 லட்சத்தை எப்படி திருப்பி கட்டுவது என ஞானேஸ்வர் செய்வதறியாது நிற்கிறார்.

இதையும் படிக்க: ''ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல, மேட் இன் சீனா'' - ராகுல் காந்தி சாடல்