இந்தியா

”சிஆர்பிஎஃப் வீரர் வழக்கு தேசிய முக்கியம் வாய்ந்ததில்லை என சொல்வதா?”- நீதிமன்றம் கண்டனம்

நிவேதா ஜெகராஜா

வழக்கொன்றின் விசாரணையின்போது, “ட்விட்டரில் வெளியிடும் பதிவுகளுக்காக சிபிஐ, என்.ஐ.ஏ சார்பில் பதியப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் போது, ‘காணாமல் போன சி.ஆர்.பி.எப் வீரரை கண்டுபிடிப்பது தேசிய முக்கியம் வாய்ந்த வழக்கு இல்லை என சிபிஐ கூறுவது அதிர்ச்சியளிக்கிறது’ “ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சண்டிகரில் சி.ஆர்.பி.எப்-ல் பணிபுரியும் நெல்லையை சேர்ந்த அண்ணாத்துரை என்பவரை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தெய்வகனி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் அண்ணாத்துரை மகாராஸ்டிராவில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படையில் பணிபுந்தார். மகாராஸ்டிராவில் இருந்து சண்டிகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 20 நாட்கள் விடுமுறை முடிந்து 2019 ஜூன் 29 ஆம் தேதி திருக்குறள் ரயிலில் சண்டிகர் சென்றார்.

2019 ஜூலை 1 ஆம் தேதி டெல்லி வந்துவிட்டதாக போனில் பேசினார். ஜூலை 2 ஆம் தேதி வாட்ஸ் ஆப்பில் பேசினார். அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை. எனது கணவர் எங்கு உள்ளார் என்ற தகவல் தெரியாததால் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த மன உளைச்சலுடனும், கவலையுடனும் உள்ளோம். எனவே  எனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில், "சி.ஆர்.பி.எஃப் வீரர் காணாமல்போன வழக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு இல்லை எனக்கூறி சிபிஐ வழக்கை விசாரிக்க முன்வரவில்லை" என தெரிவிக்கப்பட்டது. மேலும்," 2018 முதல் டெல்லி காவல்துறையினர், சிஆர்பிஎஃப் வீரர்கள்  இந்த வழக்கு குறித்து விசாரணை செய்தும் சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில், "சிஆர்பிஎஃப் வீரர் நாட்டின் பல எல்லைகளில் பணிபுரிந்துள்ளார். உயிருடன் உள்ளாரா? இல்லையா? எதிரி நாடுகளால் கடத்தப்பட்டுள்ளாரா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இதுவரை டெல்லி நபி கரீம் காவல்துறை மற்றும் பாளையங்கோட்டை காவல் துறையினர் நீதிமன்றத்திற்கு எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், 2 வாரத்திற்கு ஒரு முறை  காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரரின் ஊரில் அவர் குறித்த விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “Twitter-ல் வெளியிடும் பதிவுகளுக்காக சிபிஐ, என்.ஐ.ஏ வழக்குகள் பதிந்து விசாரிக்கும் பொழுது, காணாமல் போன ஒரு சி.ஆர்.பி.எப் வீரரை கண்டு பிடிப்பது தேசிய முக்கியம் வழக்கு இல்லை என சிபிஐ கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. சிஆர்பிஎஃப் வீரர் காணாமல் போன வழக்கு குறித்து டெல்லி நபி கரீம் காவல்துறை, பாளையங்கோட்டை காவல் துறையினர் ஏன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை?டெல்லியிலுள்ள சிஆர்பிஎஃப் சார்பாக டெல்லி நபி கரீம் காவல்துறையினர்  சிஆர்பிஎஃப் வீரர் காணாமல் போன வழக்கு குறித்த அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” எனக்கூறி உத்தரவிட்டு வழக்கினை தீர்ப்புக்காக நவம்பர் 15ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.