kkssr, thangam thennarasu
kkssr, thangam thennarasu pt web
இந்தியா

அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு வழக்கு: “3 நாட்களாக தூங்கவில்லை” - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

Angeshwar G

கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

வழக்குப் பின்னணி: 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் ரூ.44,59,067 மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக அவர் சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, ராமச்சந்திரனின் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011 -ஆம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

kkssr

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும், 28 வருவாய் விவரங்களை கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும் மனு தாக்கல் செய்தனர்.

அந்த வருவாய் விவரங்கள் குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, 10 வருவாய் ஆவணங்களை ஏற்றுக் கொண்டநிலையில் தங்களை விடுவிக்க கோரி அமைச்சர் தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதி திலகம் விசாரித்தார். முடிவில் ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்’ என இந்த ஆண்டு ஜூலை 20 தேதி தீர்ப்பளித்தார்.

இதேபோல இன்றைய மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீதும் வழக்கு இருந்தது.

அந்த வழக்கின் பின்னணி: கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் ரூ. 76,40,443 சொத்து குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரின் மனைவி மணிமேகலை மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்ததாக கூறி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

thangam thennarasu

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர் 2022 டிசம்பர் 13ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த இரண்டு உத்தரவுகளுக்கு எதிராக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை இதுவரை மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எல்.எல்.ஏ.-களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த வழக்குகளை விசாரிக்கும் முன் உச்சநீதிமன்றத்தின் சில உத்தரவுகளை முன் வைப்பதாகவும் அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, “இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கிறேன். அதற்கு பதில்சொல்லுங்கள். அதன் பிறகு வாதங்களை முன்வையுங்கள்” என்றார்.

மேலும், “அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளில் ஒரே மாதிரியான செயல்பாடுகளை பின்பற்றியுள்ளார்கள். இதைப் படித்ததில் இருந்து எனக்கு 3 நாட்களாக தூக்கம் இல்லை. மனதை உலுக்கியது. இதைக் கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் என் கடமையை நான் செய்யத் தவறியதாக இருந்துவிடும். எனவே இரு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன்” என தெரிவித்தார்.

இவர் இதேபோல இதற்கு முன் அமைச்சர் பொன்முடி மீதான ரத்து செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கையையும் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றங்கள் குறிப்பிட்ட கட்சி சார்ந்தோருக்கோ அல்லது அரசுத் தரப்பினருக்கு உரித்தானது கிடையாது. சாதாரண ஏழை எளிய மக்களுக்கானது. தேதியை மற்றும் மாற்றம் செய்து ஒரே மாதிரியான வடிவத்தை மற்றும் வைத்துக் கொண்டு விடுதலை என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்த நிலையில் 2021க்குப் பிறகு தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஆட்சியாளர்களுக்குத் தகுந்தாற்போல் அதிகாரிகள் மாறுவதாக நீதிபதி தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அவரது குடும்பத்தினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.