இந்தியா

போலீசார் பலருக்கு கொரோனா: மபியில் மூடப்பட்ட தலைமை காவல் அலுவலகம்

webteam

(கோப்பு புகைப்படம்)

நாடு முழுவதும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 640 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 ஆயிரத்து 870 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்து 200க்கும் அதிகமானோருக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் நோய்த்தொற்றின் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளனர். 148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் நோய் பரவல் அதிகரித்து உள்ளது. அங்கு 2 ஆயிரத்து 170க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் கொரோனாவைத் தடுக்கும் பணிகளில் திணறி வருவதாக கூறப்படுகிறது. அங்கு அமைச்சரவை முழுமையாக அமைவதற்கு முன்பே கொரோனா நாட்டில் பரவத் தொடங்கியது. இதனால் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அதிகாரிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு எதிராக போராடினார்.

ஆனால் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் கொரோனா பரவி வருவது மபியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அச்சத்துக்கு நடுவே நேற்று 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் போலீசார் பலருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து காவல் தலைமை அலுவலகம் மூடப்பட்டது. ஏப்ரல் 26ம் தேதி வரை மூடப்படும் என்றும், மீண்டும் திறப்பது குறித்து அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.