நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன.
அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் பரினிதா ஜெயின். 23 வயது நிறைந்த இவர், தன் உறவினர் சகோதரியின் திருமண விழாவுக்குச் சென்றிருந்தபோது அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு மேடை ஏறி நடனமாடினார். உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் முதலுதவி செய்தும் அவர் சுயநினைவுக்கு வரவில்லை.
இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனக் கூறிய மருத்துவர்கள், அதற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய திடீர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.