இந்தியா

ம.பி: வகுப்பறைக்குள் பெய்த மழை- குடை பிடித்தபடி பாடம் கவனித்த மாணவர்கள்; வீடியோ வைரல்!

ச. முத்துகிருஷ்ணன்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் மேற்கூரை சேதமடைந்ததன் காரணமாக வகுப்பறைக்குள் மழைநீர் கசிவதால், குடை பிடித்தபடி மாணவர்கள் பாடம் கவனிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கைரிகலா எனும் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் அதிகமாக பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்து மழைநீர் வகுப்பறைகளுக்குள் கசியும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குடைபிடித்தபடி மாணவர்கள் தொடர்ந்து ஆசிரியர் எடுக்கும் பாடத்தை கவனிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ட்ரைபல் ஆர்மி (Tribal Army) எனும் ட்விட்டர் கணக்கில் வெளியாகி உள்ள இந்த வீடியோ, மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பயிலும் கைரிகலா கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்டது. மாணவர்கள் கூரையில் இருந்து மழைநீர் சொட்டுவதைத் தவிர்க்க பள்ளிக்குள் குடையுடன் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முதல்வர் சிவராஜ் சவுகான் தனது குழந்தையை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புகிறார். ஏழை பழங்குடியின குழந்தைகளுக்கு இந்த நிலையே உள்ளது என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

அறிக்கைகளின்படி, பல ஆண்டுகளாக பள்ளியின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் மழைக்காலத்தில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. மழைநீர் கசிவு காரணமாக பல மாணவர்களும் பள்ளிக்கு செல்ல விரும்புவதில்லை.

பல அதிகாரிகள் மே மாதம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இப்பள்ளியை சீரமைக்க ஒரு முன்மொழிவை வழங்கினர். ஆனால் யாரும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இருப்பினும், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி, சீரமைப்புக்கான முன்மொழிவை அனுப்பியுள்ளதாகவும், நிதி வந்ததும் அப்பணிகள் துவங்கும் என்றும் தெரிவித்தார். புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கல்வித் துறையை மேம்படுத்துவதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இது போன்ற நிகழ்வுகள் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உண்மை நிலை குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.