இந்தியா

வசதியில்லாததால் சைக்கிளில் உணவு டெலிவரி செய்தவருக்கு பைக் வாங்க பணம் கொடுத்த காவலர்கள்!

நிவேதா ஜெகராஜா

மத்திய பிரதேசத்தில் மிதிவண்டியில் உணவுப் பொருட்களை விநியோகித்து வந்த இளைஞருக்கு காவல்துறையினர் இருசக்கர வாகனம் வாங்க முன்பணம் வழங்கியுள்ளனர்.

ம.பி.யின் இந்தூரின் விஜய்நகர் பகுதியை சேர்ந்த ஜெய் ஹல்தே என்ற இளைஞர், மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு வசதி இல்லாத காரணத்தால் மிதிவண்டியில் சென்று உணவு விநியோகித்து வந்திருக்கிறார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் தஹஜீப், இளைஞரின் வறுமை நிலை அறிந்து, சக காவலர்களுடன் இணைந்து அவருக்கு உதவ முன்வந்தார்.

மோட்டார் சைக்கிள் வாங்க முன்பணம் மட்டும் கொடுத்தால்போதும், மீதமுள்ள பணத்தை மாதத் தவணையில் கட்டிவிடுவதாக இளைஞர் கூறிய நிலையில், அதற்கான பணத்தை மட்டும் காவல்துறையினர் செலுத்தி இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.