மத்தியப் பிரதேச தேர்தல்
மத்தியப் பிரதேச தேர்தல் ட்விட்டர்
இந்தியா

ம.பி: பாஜவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்... சரமாரியாக தாக்கிய உறவினர்.. போலீசார் விசாரணை!

Prakash J

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன. இதில் தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக, அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியும், மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் முதல்வராகப் பதவியேற்றுள்ளனர்.

எனினும், பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் முதல்வரைத் தேர்வுசெய்ய பாஜக தலைமை மேலிடப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதையடுத்து, நாளைக்குள் தேர்வுசெய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக பெற்ற வெற்றியைக் கொண்டாடியதால் அவரது உறவினர் ஒருவர் மூலம் தாக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: 3 மாநில முதல்வர் ரேஸ்: புதியவர்களுக்கு வாய்ப்பா? களமிறக்கப்பட்ட பாஜக மேலிடப் பார்வையாளர்கள்!

மத்தியப் பிரதேச மாநிலம், சிஹொரி மாவட்டம் அகமதுபூர் பகுதியைச் சேர்ந்தவர் சமினா. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவர் பாஜக ஆதரவாளர் ஆவார். இவர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். தவிர, இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து அந்த வெற்றியையும் சமினா கொண்டாடியுள்ளார். ஆனால், சமினா பாஜகவுக்கு வாக்களித்ததையும், அக்கட்சி வெற்றிபெற்றதை அவர் கொண்டாடியதையும் சமினாவின் மைத்துனரான ஜாவித் கான் விரும்பவில்லை. மேலும், சமினாவை ஜாவித் கான் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். தன்னை திட்டியது குறித்து கேட்டபோது சமினாவை ஜாவித் கான் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

தொடர்ந்து, ”பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனவும் சமினாவை எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களித்ததால் தன்னை சரமாரியாக தாக்கிய மைத்துனன் ஜாவித் கான் மீது சமினா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய சமினா, “நான் பாஜகவுக்கு வாக்களித்ததால் என்மீது ஜாவேத் கான் கோபமடைந்தார். அத்துடன் அவர், என்னைத் தாக்கியதில் எனக்கு பல காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து போலீசில் புகார் அளித்தேன். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்” என்றார்.

இதையும் படிக்க: ”மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்”.. தமிழக அரசு அறிவிப்பு - முழுவிபரம்