இந்தியா

ம.பி: ஏர்போர்ட் வளாகத்தில் மாஸ்க் அணியாமல் கைதட்டி பூஜை நடத்திய பாஜக அமைச்சர்!

webteam

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தூர் ஏர்போர்ட் வளாகத்தில் மாஸ்க் அணியாமல் பாஜக அமைச்சர் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் கைதட்டி பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,882 ஆக உள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 3,27,220 ஆக உள்ளது. இதுவரை 4000 பேர் கொரோனாவால் அங்கு உயிரிழந்துள்ளனர்.

போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்திய பிரதேச அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்த 3 முக்கிய நகரங்களிலும், மறு அறிவிப்பு வரும் வரை எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தூர் ஏர்போர்ட் வளாகத்தில் மாஸ்க் அணியாமல் பாஜக அமைச்சராக இருக்கும் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் சிலை முன்பு கைதட்டி பூஜை வழிபாடு மேற்கொண்டார். இந்த பூஜையில், விமான நிலைய இயக்குநர் ஆர்யாமா சன்யாஸ் மற்றும் பிற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உஷா தாக்கூர் பெரும்பாலும் மாஸ்க் அணியாமல் பொது வெளியில் காணப்படுகிறார் என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். சட்டமன்ற அமர்வின் போது, ஏன் மாஸ்க் அணியவில்லை என்று உஷா தாக்கூரிடம் கேட்கப்பட்டபோது, அவர் ஒவ்வொரு நாளும் ஹனுமான் மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பதால் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.