3 ஆண்டுகளுக்கு முன் இறந்த குஞ்சுக்காக கிராமவாசி ஒருவர் மீது காக்கைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மத்தியபிரதேசம் ஷிவ்புரி மாவட்டம் சுமேலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா கேவத். இவர் கடந்த 3 ஆண்டுகளாக காக்கைகளில் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார். வெளியே கிளம்பினாலே குச்சியுடன் செல்கிறார் சிவா. 3 ஆண்டுகளுக்கு முன் வலையில் சிக்கிய காக்கை குஞ்சு ஒன்றை சிவா காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவர் கையில் இருக்கும் போதே காக்கைக்குஞ்சு இறந்துவிட்டது. இதனைக் கண்ட காகங்கள், குஞ்சின் இறப்புக்கு காரணம் சிவாதான் என நினைத்து அவர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதல் 3 வருடங்களாக தொடர்வது தான் ஆச்சரியம்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவா, ''நான் அதன் குஞ்சை கொன்றுவிட்டதாக காக்கைகள் நினைத்துவிட்டன. ஆனால் நான் காப்பாற்றவே நினைத்தேன்'' எனத் தெரிவித்துள்ளார். சிவாவின் சோகம் அப்பகுதி மக்களுக்கு பொழுது போக்காகிவிட்டது. அவர் வெளியே வந்தாலே காக்கைகள் அவரை வட்டமிடத் தொடங்குவது பலருக்கும் வேடிக்கையாக உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பறவைகள் ஆய்வாளர்கள், ''காக்கைகள் ஆட்களை நினைவில் வைத்திருக்கும் அறிவுத்திறன் கொண்டவை. அதனிடம் தவறாக நடந்துகொண்டால் நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கும் திறன் கொண்டவை’’ எனத் தெரிவித்துள்ளனர்